Thursday, December 31, 2009

கல்வித் துளிர்

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா? ... என்னடா இளையராஜா பாட்டைப் பாடறேன்னு நினைக்கிறீங்களா?. வசிப்பது அமெரிக்காவில் என்றாலும் வளர்ந்தது என்னவோ மறவபாளையத்தில்.கணினியில் கவிதை பாடினாலும், கழனியில் கதிரறுத்த நினைவுகளை நெஞ்சம் மறப்பதில்லை. படிச்சது தமிழ் வழிக் கல்வியில். என்னோட அரைகுறை ஆங்கிலத்துக்கு A ,B, C சொல்லிக் கொடுத்தவர் திரு. சிவப்ரகாசம். அவரே 15 வருடங்கள் கழித்து மறவபாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வந்தார். ஆசிரியரிடம் பேசிய கதையைப் பேசப் போய், ஏதாவது உருப்படியாய் செய்வோம் என நினைத்தோம் நானும் என் தம்பியும். ஊர் கூடி தேர் இழுக்கும் கதையாய் ஆரம்பித்து விட்டோம் கல்வித் துளிர் என்னும் முன்னாள் மாணவர்கள் அமைப்பை. மறவபாளையம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு. சிவப்ரகாசம், ஆசிரியர் திரு. ராஜசேகர், திரு. நல்லசிவம் (NN Engineering Products, Covai) , திரு. பெரியசாமி ( Gomala textiles, Thirupur), திரு. கந்தசாமி (Thirumurugan traders, Chennimalai ) என் சகோதரர்கள் திரு. கதிரவன், திரு. மதியழகன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் முதலடியை எடுத்து வைத்துள்ளோம்.

பணம் என்னும் மாயக்காரனால் பள்ளிக் கல்வி மறுக்கப்படும் அனைவருக்கும் உதவுவதும், இயற்கை விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதும் எங்களின் நோக்கம். மறவபாளையத்தில் வேர் விட்டு உலகெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் நாங்கள் தற்போது வேரைத் தாங்கும் விழுதுகளாய் முளைக்கத் தொடங்கியுள்ளோம். வரும் காலங்களில் எங்களின் விழுதுகள் பக்கத்துக் கிராமங்களுக்கும் வேர் பிடிக்கும்.

விரும்பினால் எங்களுடன் இணைய : kalvithulir@gmail.com

No comments:

Post a Comment