Sunday, August 29, 2010

Deals2products.com - E-Commerce site from Kalvithulir Trust

Our past milestones were launched by unconditional donors of Kalvithulir trust. We always thankful to them and thought of giving more benefits apart from tax reduction receipt. That is how the idea of promoting ecommerce site came from Kalvithulir. Instead of donating money, if they buy their favourite products either way both will be benifited.

We named it as http://deals2products.com/  . We have millions of  products in the fields of Health, wellness, Home care, Body care, Beauty care Products. Also we have your  branded companies like Dell, Sears,Barnes and Nobles,Petco,Office Max in the Shop Section. All our products are organic and bio degradable.

We  look forward to helping you!

Tuesday, August 24, 2010

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 
மண்ணின் வில்லன் 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! ) 
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Tuesday, August 17, 2010

நன்றிகள் பல

மறவபாளையம் நடுநிலைப் பள்ளியில் கல்வித்துளிர் அறக்கட்டளை நியமித்துள்ள ஆசிரியர்களுக்கான ஜீலை மாதச் சம்பளத்தை, திரு.கோபால் அவர்கள் கொடுத்துள்ளார்.

ஒரு தொலைப்பேசி உரையாடலில் உதவிட முன்வந்த கோபால் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, August 11, 2010

வண்ணம் தீட்டலாமா?- Free coloring pages for children

தங்களது ஓய்வு நேரத்தில் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவது குழந்தைகள் பலவிதக் கலைகளில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன் அவர்கள் பயனுள்ள விதத்தில் கேளிக்கைகளில் மகிழ உதவுகிறது. குழந்தைகளுக்கு ஓவியக் கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, மருதாணிமற்றும்,வண்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் வழிகாட்ட Lesuire பகுதி கல்வித்துளிர் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


Thursday, August 5, 2010

என்ன செய்யப் போகிறோம் நாம்.........?

நன்றி தோழர் துரை. ந. உ அவர்களுக்கு

அன்பு உள்ளங்களே

சில சின்னச் சின்ன செய்திகளை முதலில் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் . அவைகளுக்கிடையே தொடர்பில்லாமல் இருந்தாலும் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கித் தொடர்ந்து வாருங்கள்

செய்தி 1 :

'' நான் கோவைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருந்த நேரம். என் பொண்ணுக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. அவசரமா ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப்போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா பாருங்க ...சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

மாவட்டத்தின் மிகஉயர்ந்த பதவியில் இருந்த ஒரு அரசு ஊழியரின் பரிதாப வாக்குமூலம் இது .....

செய்தி 2:

வங்கி சேமிப்பு = 7,172 ரூபாய்

எல்.ஐ.சி. ஹவுஸிங் லோனில் வீடு = மதிப்பு ஒன்பது லட்சம்

இது பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மொத்த சொத்தின் மதிப்பு

செய்தி 3 :



இதனை தனது உயிர்மூச்சாகக் கொண்டு , அலுவலக நுழைவாயிலும், தனது தலைக்கு மேலும் அனைவரின் பார்வையிலும் படும்படியாக எழுதி வைத்துக்கொண்டு,. (மரத்தாலான பள்ளிக்கூட மேசை, ’S’ டைப் / வலைபின்னிய இரும்பு நாற்காலி .அதில் ஒரு வெள்ளைத் துண்டு விரிப்பு –இதுதான் அலுவலக அமைப்பு) நிமிர்ந்தபடி உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர்

செய்தி 4 :

 தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு, இது வரை தனது அலுவலக வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகளுக்கு உயிர்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிருவனங்கள் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில், கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு வைத்து பராமரிக்கும் மரங்களின் எண்ணிக்கை இதுவரையிலும்.... மொத்தம் 25 லட்சத்திற்கும் மேல் ...........ஒரு அரசு ஊழியரின் நனவாகிக்கொண்டிருக்கும் கனவு இது.....

செய்தி 5 :


விவசாயிகளே நம் நாட்டின் ஜீவன் - முதுகெலும்பு
எனவே விவசாயிகளை கௌரவிப்போம் !
விவசாயிகளுக்கு நம் அலுவலகத்தில்
முன்னுரிமை அளிப்போம் !!

அவரது அலுவலகத்தில் அனைவர் பார்வையும் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு இது

செய்தி 6 :

விவசாய மக்களின் வேலைப் பளுவினைக் கருத்தில் கொண்டு’குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள்’ என தன் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில்சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்துவைக்க , திடீரெனத் தேர்ந்தெடுத்து ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து, முடிந்த அளவுக்கு அங்கேயே தீர்த்தும் வருகிறார் அவர்

செய்தி 7 :

ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதியினர் தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ’தான் வந்திருக்கும் செய்தி அறிந்தும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை’ கொள்வதாகக் கூறி அவர்களோடு புகைப்படம் எடுத்து அதைத் தனது அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார் அவர்

செய்தி 8 :
கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்குள் அறிவிப்பின்றி நுழைந்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்தும் , பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களுடன் நேரடியாக அவர்களுடன் கடிதத் தொடர்பும் கொள்கிறார் அவர்.

செய்தி 9 :

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் உழவர் சந்தைகள் ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,

'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே'

என்ற மாற்றுச் சிந்தனையில் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கினார் . காலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் சூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

இங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. சுற்றுவட்டார விவசாயிகளில் ஒருவரான எர்ணாபுரம் வெண்ணிலா, ''தினமும் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வியாபாரமாகுது. தினசரி 500 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்குது. கடைக்குத் தேவையான பொருளுங்களை தினமும் எங்க ஊர்ல இருந்து வாடகைக்கு ஆட்டோ பிடிச்சுதான் கொண்டு வந்துகிட்டிருந்தேன். வாடகை மட்டுமே மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய். இப்ப, இதுக்காகவே சொந்தமா ஒரு மாருதி கார் வாங்கியிருக்கேன். எல்லாம் இந்த உணவகத்துல சம்பாதிச்ச காசுலதான்'' என்றவரின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று புதிய சிந்தனையை விதைத்திருக்கிறார் அவர்

செய்தி 10 :
தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அவர்

--எனக்குத் தெரிந்த குட்டிச் செய்திகள் ( ஒரு நாள் அறிமுகத்தில் அறிந்து கொண்டது) இத்துடன் நிறைவு பெறுகிறது

பெயரில் என்ன இருக்கிறது ?’என்று கேட்டான் அறிஞன் ஒருவன்

என்னைக்கேட்டால் ”பெயரிலும் எல்லாம் இருக்கிறது..!” என்றுதான் சொல்வேன்

ஆம்....

சகாயம்


உ.சகாயம் ஐ.ஏ.எஸ்


மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம்

(ஊர் : புதுக்கோட்டை. ;தந்தை : உபகாரம் பிள்ளை. தாயார் : சவேரியம்மாள்.)

மேலேயுள்ள செய்திகளின் நாயகர். ஏழை எளியவர்கள் சகாயம் அடைய நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர் அவர் .

அவரது ஒரு நாள் செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பினைப் பெற்றதே எனக்குக்கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் . ஆம் .

‘ நான்’ என்று எனக்குள் இருக்கும் ’தற்பெருமையை’ பல சமயங்களில் / இடங்களில் /கிடைத்த பாடங்களால் செப்பனிட்டிருக்கிறேன் , சரி செய்திருக்கிறேன் . ஆனால் அதன் பெரும்பகுதியை அழித்தது நாமக்கல் ஆட்சியரின் அலுவலக வளாகத்தில்தான் .

நான் இங்கே எது சொன்னாலும் அவரது புகழ்பாடுவது போலவேத் தோன்றும் . ஆனாலும் இங்கெ இதைப் பதிவு செய்தே ஆகவேண்டும் .

அவரைப்போலவே சுற்றமும் !

ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்கான சாட்சியம் அவரது வீடு . குறை சொல்ல வந்த ஒரு கிராமத்து விவசாயியின் 2வயசுக் குழந்தையை கலெக்டர் வீட்டம்மா தூக்கிக் கொண்டு போய் (காலைலயே வந்துட்டாங்க போல ...மதியம் 2 மணி ஆகி விட்டதால் ) சாப்பாடு ஊட்டி, ஒன்னுக்குத் தொடைச்சு , ஒழுகிய மூக்கை சுத்தம் செய்து ...

’’’’’’’’’’’’’’’’’

சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு இதுபோன்ற பணிவிடை செய்ய எப்படி மனது வரும் ???? இதெல்லாம் எப்படி சாத்தியம் ??

நினைக்கும் போதெல்லாம் என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை .

ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் அவருக்கு............

என்ன ஒரு எளிமை !!

( அதிக விளக்கம் தேவை இல்லை .இணைப்புப் படத்தில் அவரது சட்டையின் [காலர்]கழுத்துப்பட்டையின் நிறமே இதற்குச் சான்று :)

தமிழக இளைஞர்களுக்கு அப்துல்கலாம் அய்யாவுக்கு அடுத்து , வாழும் வழிகாட்டியாக உருவாகிக்கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அய்யா .சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் என்றால் அது மிகையாகாது

‘நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக தண்டனை தரணுமுன்னா ,தாராளமாப் பண்ணிக்கோங்க'

ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது இப்படிப் பேசுகிறார்

( தொலைபேசியில் , நேரில் )

ஆலமரம் அதன் கடமையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறது
தன்னலமின்றி மேல் நோக்கி விரியும் கிளைகளை உரிய நேரத்தில் இறங்கித் தாங்க வேண்டியது விழுதுகளின் கடமை ! . நமது கடமை !!
வேர்களை வழுவாக்க விழுதுகள் கீழ் நோக்கி விழவேண்டும்
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

வெளிப்பார்வைக்கு சிங்கம் அரசாண்டு கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது . கூர்ந்து கவனித்தால்தான் தெரிகிறது . சிங்கத்தின் பாதையில் காத்திருக்கும் புதைகுழிகளும் , குள்ள நரிகளும் , தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளும் ,குறிவைத்து மறைந்திருக்கு அம்புகளும் .
உண்மையில் சிங்கம் ஒன்றும் அரியணையில் அமர்ந்திருக்கவில்லை .
கூரான கத்திமேல் நின்று கொண்டிருக்கிறது
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

’’நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!''
- தடதடக்கும் அவரது வார்த்தைகளில் வெட்ட வெளிச்சமாகிறது நடப்பு நிலவரம் என்ன செய்யப்போகிறோம் நாம் ?

.’’ வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடுதான் ஓய்வு பெறணும்னு மட்டும்முடிவு பண்ணுனேன்’’ ஏக்கத்தோடு வெளிப்படு இந்த குறைந்த பட்ச ஆசையை நிறைவேற்ற
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.
பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் இவர்களைப் போன்றோர்தான்.
இவர்களில் வெளி உலகின் பார்வைக்குத் தெரிபவர்கள் 1 சதத்துக்கும் கீழ்தான்.

மற்றவர்களின் இருப்பையும் தேடிப் பதிவுசெய்ய வேண்டும். அவர்களும் கவனிக்கப் படுகிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப் படுத்தவேண்டும்

முடியுமா....!?

நம்மால் முடியும் !!!

அதற்காக ..... அடுத்து

என்ன செய்யப்போகிறோம் நாம் ?




தேடிச் சோறு நிதந்தின்று-பல


சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்


வாடித் துன்பமிக உழன்று-பிறர்


வாடப் பலசெயல்கள் செய்து- நரை


கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்


கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல


வேடிக்கை மனிதரைப் போலே-நான்


வீழ்வேனென்று நினைத்தாயோ ?



வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் , ஒரு நிமிடம் ஒதுக்கி மேலுள்ள வரிகளை மீண்டும் ஒரு முறை , மெதுவாகப் படித்து உள்வாங்குங்கள் ...




’என்ன செய்யப் போகிறோம் ??’ என்ற கேள்வி
‘ நம்மால் எதுவும் செய்ய முடியும் .. !!’ என்று மாறும் .

மாறும் இதயங்களுக்காகக் காத்திருக்கிறேன் ...
வாருங்கள் உறவுகளே .......

நன்றி : செய்திகளுக்காக /


திரு.ஆல்பர்ட் பெர்ணாண்டோ , திரு. நிஜாமுதீன் , ஆனந்தவிகடன் , பசுமை விகடன், தமிழ்த் தென்றல் மின்னிதழ் .
--
என்றும் அன்புடன் -- துரை --