Friday, November 5, 2010

தீபத் திருநாளில் கல்வித் துளிரின் இனியதொரு தொடக்கம்

தானம் தரவே யோசிப்பவர்கள் பலர். சற்றே மனம் இளகியவரானால் தனக்கு பின்தான் தானம் தருமம் என்று சொல்பார்களும் உண்டு. தனக்கென சேர்த்துக் கொண்டே போகும் போது, பிறருக்கு கொடுக்கும் வாய்ப்பு வராமலே போகலாம்.


கேட்டவுடன் வாரி வழங்க விழையும் நல்மனம் கொண்டோர் கல்வித்துளிருக்கு கிடைத்திருப்பது எங்களின் பாக்கியம்.

பலரின் நன்கொடையாக எங்களின் தேவைக்கும் அதிகமான பணம் கடந்த மாதம் எங்களுக்கு வந்து சேர, எங்களின் தேவை போக மீதியை தேவைப்படுவோருக்கு தீபத் திருநாளில் கொடுத்திட விரும்பினோம்.

அதற்கென நாங்கள் தேர்ந்தெடுத்தது ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருக்கும் பாரதியார் மனம் நலம் குன்றியவர்களுக்கான இல்லம். 5 வயது குழந்தை சிந்திக் கொண்டே உண்டால்,
 கோபம் வரும் நமக்கு. மனம் சரியில்லாத 50 வயது குழந்தை சிந்தினால் பொறுமையாகச் சுத்தம் செய்யும் மனமுண்டா?

6 வயது முதல் 60 வயது வரையுள்ள 35 பேரை கவனிக்கும் பொறுமை நமச்சிவாயன் மற்றும் பணியாளர்களுக்கு உள்ளது.

35 பேருக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சுத்தமான குடிநீர் கொடுத்திட,  தண்ணீரை சுத்தகரிக்கும் கருவி கல்வித்துளிர் சார்பில் மன நல காப்பகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

பீனிக்ஸ், அரிசோனாவைச் சேர்ந்த திரு & திருமதி. மணிகண்டன், திரு.&திருமதி. தசரத் மற்றும் பலரின் விரிந்த மனதால் எங்களின் இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளது.

எங்களின் முயற்சிக்கு உதவிய பலரில் தசரத் அவர்களின் நண்பர் திரு. பீரதீப் அவர்களும் ஒருவர். கல்வித்துளிரை பற்றி அணுவளவும் தெரியாத ஆந்திரத்து சகோதரர் அவர். நண்பர் தசரத் கல்வித்துளிரின் முயற்சியை கூறியதும், எங்களுடன் இணைந்தவருக்கு எங்களின் வணக்கங்கள்.

அடிப்படைத் தேவைகளுக்கு பணம் இருக்க, ஆடம்பர செலவில் ஒரு சிறு பகுதியை தேவைப்படுபவருக்கு கொடுத்து உதவ மனம் இருப்போர் நம்மில் எத்தனை பேர்?. அப்படியே தருவதாய் இருந்தாலும் யாரென்றே தெரியாதவருக்கு நண்பரின் வார்த்தைகளுக்காய் கொடுக்க மனம் இருப்போர் நம்மில் எத்தனை?.

கல்வித்துளிரால் இத்தகைய பொன்மனம் கொண்டவர்களை கண்டறிய முடிந்தது கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

தீபத் திருநாளில் துளிர் விட்ட இந்த முயற்சி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கல்விக்காக மட்டுமின்றி, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக துளிரும்.

2 comments:

duraian said...

வாழ்க ...வளர்க ....

தங்களின் செயல்பாட்டுகளுக்கு துணையாக ஒரு அணிலாக நாங்கள் வரப்போகும் நாள் மிக அருகில்..

வாழ்த்துகள்

Kavitha Prakash said...

நன்றி தோழரே!

Post a Comment