Friday, September 17, 2010

September Month Donors

Sharmila Ravikumar and Prabha Manikandan has paid the salary for the teachers appointed by Kalvithulir.

Through this post we are conveying our hearty thanks to them

Thursday, September 9, 2010

விதை ஒன்று ..! , விருட்சங்கள் மூன்று லட்சம் ...!

தாதன்குளம் , தூத்துக்குடி மாவட்டம் . ஒரு பள்ளிக் கூடம கட்டும்வேலை சம்பந்தமாக எனக்கு ஒரு அழைப்பு . 13மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர் , தமிழகத்தின் குறிப்பிடத்தக்கப் பெரியவர்களுள் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரும் மகிழ்வைத் தந்தது . ஒரு கார்ப்பொரேட் அலுவலகம் , ரிசப்சனிஸ்ட் , நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் என சில எதிர்பார்ப்புகள் / ஒத்திகைகளுடன் கிளம்பிச் சென்றேன் .




தோட்டத்து பண்ணைவீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒருசிலரைத் தவிர நான் எதிர்பார்த்த பரபரப்பு ஏதுமில்லை . கதர்துணியில் தைக்கப்பட்ட பனியன் , பழைய நைந்துபோன தேங்காய்ப்பூத்துண்டுடன் ஒரு பெரியவர் , வந்திருந்த யாரையோ கார் கதவைத் திறந்துவிட்டு , வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.



வாசலில் நின்றுகொண்டிருந்தேன் . காத்திருந்த வேளையில் மெலிதான பதட்டம் . கைகள் பக்கதிலுள்ள வேப்பமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக கிள்ளிக் கொண்டிருந்தது .



சிறிது அமைதி . பின்னாலிருந்து எனது தலையில் செல்லமாக ஒரு குட்டு விழுந்தது . அதே பெரியவர் பின்னால் நின்றிருந்தார் .



’’அந்த மரம் உங்களை என்ன பண்ணுச்சு கண்ணு ’’



தீர்க்கமாக எனது கண்களுக்குள் பார்த்துவிட்டு



“தம்பிக்கு சாப்பிடக் கொடுங்க



எனச் சொல்லிவிட்டு உள் நோக்கி சென்றுவிட்டார் .மரம்தானே , இலைதானே என சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அந்தக் கேள்வி சம்மட்டி அடியாய் விழுந்தது . ஏதோ தவறாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரியத் தொடங்கியது அந்த நொடியில் .



உள்ளே சென்றேன் . வெளிமுற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவர் .



‘எங்கே போனாலும் இவருதான் இருக்காரு ,யாராய் இருக்கும் ?’



மேற்கொண்டு விசாரிக்க அருகில் யாரும் இல்லை . மெதுவாக அவரிடமே விசாரிக்க முடிவு செய்தேன் .


”இங்கே சேர்மன்.குப்புசாமி சார் அவர்களை பார்க்கணும்”



”சொல்லுங்க கண்ணு , நான் தான் குப்பன்”



இடி இறங்கியது போல உணர்ந்தேன் . எனது கணிப்புகள் / எதிர்பார்ப்புகள் எல்லாம் குலைந்து நொடியில் பாலையில் ஒருபிடி மண்ணைப்போல என்னை உணர்ந்தேன் .



இந்த அளவுக்கு எளிமையாய் நான் இதுவரையில் யாரையும் சந்தித்ததில்லை .அப்போதைக்கு இருசக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறி இருந்தைதையே நான் உலக சாதனைபோல எண்ணியிருந்தது அப்போதுதான் எனக்கு உறைத்தது . அய்யாவின் சந்திப்பு வாழ்க்கையில் புதிய மாற்றத்தை எனக்குள் உரைத்தது .

எனக்கான போதிமரம் அங்கே இருந்தது .


நான் வந்து சேர்ந்த இடம் பற்றி தெரியத் தொடங்கியது எனக்கு. உழைப்பின் பொருள் புரிய ஆரம்பித்தது எனக்கும் . புதியதாய் ஒரு உலகம் விரிய ஆரம்பித்தது எனக்குள்.



அவர்

ஆர்.வி.எஸ்.கல்வி அறக்கட்டளையின் தலைவர் .

திரு.கே.வி. குப்புசாமி அய்யா .அவர்கள் . 69 வயதிலும் அரை நொடி ஓயாமல் அனைத்து இடங்களிலும் சுழன்று வருகிறார் . கல்வித்துறையில் மிகப் பெரிய சாதனையாளர் . இங்கே அவருக்குள் மறைந்திருக்கும் விவசாயியையும் , மனித நேயத்தையும் வெளியுலகப் பார்வைக்கு எடுத்து வைப்பதே கட்டுரையின் முதன்மை நோக்கம் .



திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் புதிய செயல் முறைகளுக்குச் சொந்தக்காரர் அவர். திட்டங்களை விளையாட்டாய் ,ஆரம்பித்து ,வித்தியாசமாய்த் தொடர்ந்து , விதிமுறைகளைக் கடந்து , விசுவரூபமாக்கிக் காட்டுவார்.



( எடுத்துக் காட்டாக : மாலை ஆறுமணி . செம்மண்சரல் அடித்து நிரப்பப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி மைதானத்தில் வந்து அமர்ந்தார் . மெதுவாக சில கற்களைப் பொறுக்க ஆரம்பித்தார் . நாங்களும் தொடர்ந்தோம் . அந்த வழி வந்தவர்களும் தொடர்ந்தார்கள் .மூன்றே நாட்கள் .. விளையாட்டாக அந்த மைதானமே குழந்தைகள விழுந்து விளையாடும் அளவுக்கு சுத்தமாகி இருந்தது )



2010 :பத்தாண்டுகளில் மழைமறைவுப் பிரதேசங்களாக இருந்த , மேய்ச்சல் நிலங்களாக , காலடித்தடமே படாத வறண்ட இடங்களில் மழையின் நேசம் , மண்வாசம் வீசத்துவங்கி இருக்கிறது



தரிசாகக் கிடந்த இடங்களை சோலைகளாக்கி , மரங்களுக்கு நடுவில் மழை நீரை சேகரிக்க ஒரு குளம் வெட்டி , வறண்ட் பூமிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவைத்து , தன்னை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வு உயரவும் வழி செய்திருக்கிறார் .



ஒரு தனிமனித முயற்சியில் ,பத்தாண்டுகளில் இது சாத்தியமென்றால் , ஆள்வோரும் ,அதிகாரவர்க்கமும் அய்யாவின் பாதையில் தொடர மனம்வைத்தாலே போதும் ., தமிழகம் சொர்க்கமாகும் காலம் வெகுதொலைவில் இருக்காது .





அசோகர் மரம் நட்டினார் ,கரிகாலன் குளம் வெட்டினார் என்று பள்ளிப்பாடங்களில் வரலாறாகப் படித்தை நேரில் காணும் வாய்ப்பும் , அந்நிகழ்வில் பங்குபெறும் பாக்கியமும் பெற்றதே எனது பிறவிப் பயனாகும் .



தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பரந்து விரிந்த மிகப் பெரியக் கூட்டுக் குடும்பம் இவருடையதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது . குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சங்களுக்கும் மேல் . ஆம் அவர் தனது குழந்தைகளாக பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை இது . ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி கவனிப்பு முறைகள் , வளர்ச்சிக் குறிப்புகள் , சொட்டு நீர்ப்பாசன வசதிகள் , இயற்கை உரங்கள் .



எங்கோ ஒரிடத்தில் ஒருமரத்தின் கிளை முறிந்தாலும் உடனடியாக செய்தி அவரை வந்து சேரும் அளவுக்கு மிகப்பெரிய அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். மரங்களின் மேல் பாசம் கொண்ட ஒரு தனி மனிதச் சாதனையாகும் இது .





அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் பல கட்டிடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் சில இடங்களில் விலக்கிக் கட்டப் பட்டிருக்கும் . சிறிது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும் .அது பொறியாள்ர்கள் தவறல்ல என்பதும் ,அவை மரங்களுக்காக தனது நேர்த்தியை விட்டுக்கொடுத்து ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதும் .இங்கே கட்டிடமே முதன்மை என்றாலும் , ஏதாவது ஒரு மரத்தின் ஒரு கிளை கூட இதனால் ஊனமாக அவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ள் மாட்டார்



மரம் வளர்த்து ,மண்ணுயிர் போற்றி , வரும்காலம் காக்கும் மாமனிதரின் அருகில் குடியிருக்க ஆண்டவனும் விரும்புவார் . விரும்புகிறார் .



ஆம் .... அய்யா இருக்கும் கோவை , சூலூரில் அவரது அயராத உழைப்பில் ,தமிழகத்தின் ஆறுபடை முருகனும், ஆந்திரத்தில் இருந்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருப்பதியும் எற்கனவே குடிகொண்டு விட்டார்கள் .


12.09.10ல் கேரளத்தில் இருந்து பகவதி அம்மனும் குடியேறுகிறார்



உழைப்புக்கு ஒர் உண்மையான எடுத்துக்காட்டு .


உலகைக் காக்கும் மரம் வளர்ப்புக்கு ஒரு வாழும் வழிகாட்டி .



பலன் எதிர்பாராமல் பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். அதையும் கடமையாய் செய்து கொண்டிருக்கிறார் .

அவரது 3 லட்சம் குழந்தைகள் 30 லட்சமாக வாழ்த்துவோம் .

அவரை வாழ்த்துவது நம்மை நாமே வாழ்த்திக் கொள்வதுபோல என்பதை உணர்வோம் .


வீட்டிற்கு ஒரு மரம் வைத்து நாமும் வருங்கால வசந்தத்தை நோக்கி நமது முதலடியை எடுத்து வைப்போம் .



அவரது அயராத உழைப்பினை உணர்ந்து கொண்டுள்ளோம் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துவோம் . உற்சாகம் அளிப்போம் .


[அய்யாவின் அலைபேசி எண் : 9443169333 , 9842288333]



அய்யா அவர்களின் வழி தொடர்வோம். வருங்காலம் காப்போம் !





எனக்கு முடிந்த அளவில் அய்யாவுக்கு ஓரு குறள் அதிகாரம் :



உலகத்தைக் காக்க மரம்வளர்ப்போர் சுற்றி

உலவ விரும்பும் இறை.......................................................[01]



மரம்வளர்த்து மண்ணுயிர் காப்போர் அருகில்

குடியிருக்க எண்ணும் இறை...............................................[02]



இரங்கும் மனம்கொண்டு இல்லாதோர் போற்று;

இறங்கும் உனக்குள் இறை..................................................[03]



செந்தமிழால் வாழ்த்துவார்; வந்தாரைப் போற்றுவார்

கந்தனே சாமி அவர்க்கு........................................................[04]





ஐயன் அருகிருந்தால் ஐயம் தெளியும்;

வாய்க்கும் சிறந்தநல் வாழ்வு.............................................[05]



எட்டு திசையும் எடுத்துரைப்போம்; அய்யனென்றால்

நட்பென்றும் ஓர்பொருள் உண்டு........................................[06]



எங்கிருந்து வந்தாலும் நல்அபயம் வாய்த்திடும்;

கொங்கில் கிடைத்திடும் வாழ்வு.........................................[07]



எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)

எதுவும் மலையில்லை இங்கு...........................................[08]



வாழ்த்த வயதில்லை; வானுயர் அய்யாவின்

வாழ்க்கைத் தடம்தொடர் வோம்........................................[09]



காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்

வானமும் நம்வசப்ப டும்....................................................[10]





--

என்றும் அன்புடன் -- துரை --